சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாக். கிரிக்கெட் வாரியம் ஆப்சென்ட் - புது சர்ச்சை
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்தது.
- சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் நிறைவு விழாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரியை மேடைக்கு அழைக்காமல் விட்ட சம்பவம் புது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், போட்டி இயக்குநராகன சுமைர் அகமது போட்டியின் போது மைதானத்தில் தான் இருந்துள்ளார்.
எனினும், தொடரின் நிறைவு விழாவிற்கு அவர் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தொடரின் பாதி போட்டிகள் பாகிஸ்தானிலும், இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் துபாயிலும் நடைபெற்றன. இந்தத் தொடரை பாகிஸ்தான் அணி நடத்தியது. பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி. நிகழ்வு ஒன்றை நடத்தியது.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, "ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி துபாய் செல்லவில்லை. எனினும், அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாகிஸ்தான் சார்பில் துபாய் வந்திருந்தார்," என்று கூறப்படுகிறது.
தவறான புரிதல் அல்லது வேறு ஏதோ காரணங்களால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி மேடைக்கு அழைக்கப்படவில்லை. ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் தேவ்ஜித் சைகியா ஆகியோர் வீரர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் ஜாக்கெட்டுகளை வழங்கினர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தகவல் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரை நடத்திய நாடு (பாகிஸ்தான்) என்ற வகையில், அதன் நிறைவு விழாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூட அழைக்கப்படாத சம்பவம் குறித்து ஐ.சி.சி.-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்கும் என்று தெரிகிறது.