இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் மரணம்- பிசிசிஐ இரங்கல்
- 1967 மற்றும் 1975-க்கு இடையில் 29 டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
- சையத் அபித் அலி இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1018 ரன்கள் மற்றும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இந்தியாவின் மறக்க முடியாத டெஸ்ட் வெற்றிகளில் ஆல்ரவுண்டராக முக்கிய பங்கு வகித்திருந்தார்.
அவரது காலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அபித் அலி, 1967 மற்றும் 1975-க்கு இடையில் 29 டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். குறிப்பாக, 1971இல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்தில் இந்தியாவின் வரலாற்று வெற்றிகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
83 வயதான சையத் அபித் அலி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.
சையத் அபித் அலி இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1018 ரன்கள் மற்றும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவர் 1941 செப்டம்பர் 9-ம் தேதி ஐதராபாத்தில் பிறந்த அபித் அலி, 1967-68 -ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அடிலெய்டில் நடந்த தனது முதல் டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 33 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்தியா 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தொடர்ந்து சிட்னியில் நடந்த ஒரு மறக்க முடியாத போட்டியிலும் அவர் சிறந்த பங்களிப்பைத் தந்தார். 1975-ம் ஆண்டு நடைபெற்ற தொடக்க ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். மான்செஸ்டரில் நியூசிலாந்திற்கு எதிரான ஒரு சிறப்பான ஆட்டத்தில், அவர் 98 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தினார்.
அவர் இன்னும் நவீன யுகத்தில் விளையாடியிருந்தால், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்திருப்பார் என அவர் காலத்தைய ஜாம்பவான்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.