கிரிக்கெட் (Cricket)

பெண்கள் பிரிமீயர் லீக்: அதிக ரன் குவித்து எலிஸ் பெர்ரி சாதனை

Published On 2025-03-12 16:07 IST   |   Update On 2025-03-12 16:07:00 IST
  • மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெர்ரி 49 ரன்கள் குவித்தார்.
  • பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி மும்பையில உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 20-வது மற்றும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.

இதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிசுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில் 'டாஸ்' ஜெயித்த மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 65 ரன்கள் திரட்டினர். எலிஸ் பெர்ரி 49 ரன்களுடன் (38 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

அடுத்து களம் இறங்கிய மும்பை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் 49 ரன்கள் குவித்ததன் மூலம் ஆர்சிபி அணி வீராங்கனை புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் பெங்களூரு வீராங்கனை எலிஸ் பெர்ரி முதலிடத்தை பிடித்தார். அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 972 ஆக (25 ஆட்டம்) உயர்ந்தது. டெல்லி கேப்டன் மெக்லானிங் 939 ரன்களுடன் (26 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

Tags:    

Similar News