மகளிர் பிரீமியர் லீக்: இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதுவது யார்? மும்பை-குஜராத் நாளை பலப்பரீட்சை
- மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
- மும்பை-குஜராத் ஆகிய இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது.
மும்பை:
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (தலா 10 புள்ளிகள்), குஜராத் ஜெயன்ட்ஸ் (8) ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (6), உ.பி. வாரியர்ஸ் (6) ஆகியவை வெளியேற்றப்பட்டன.
டெல்லி, மும்பை அணிகளில் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்தை பிடித்தது. அந்த அணி 15-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
இறுதிப்போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது? என்பது நாளை தெரியும். மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லியை சந்திக்கும். தோற்கும் அணி வெளியேறும்.
இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது. வதோதராவில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் 9 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் நம்பிக்கையுடன் விளையாடும்.
அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் இறுதிப் போட் டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.