கிரிக்கெட் (Cricket)
null

விஜய் ஹசாரே போட்டியை கண்டு கொள்ளாத சஞ்சு சாம்சன் - விசாரிக்க பி.சி.சி.ஐ. திட்டம்

Published On 2025-01-17 11:36 IST   |   Update On 2025-01-17 12:25:00 IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.
  • அனைத்து வீரர்களும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதற்கும் முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இழந்து இருந்தது. தொடர் தோல்விகள் காரணமாக இந்திய அணி ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், அனைத்து வீரர்களும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற விதிமுறையும் அடங்கும். மிக அத்தியாவசியமான சில காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன், விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் பங்கேற்காதது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டிக்கு முன்பாக நடந்த முகாமில் சஞ்சு சாம்சனால் பங்கேற்க முடியாததால் அவரை கேரள கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்யவில்லை.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து தேர்வாளர்களும் வாரியமும் மிகத்தெளிவாக உள்ளன. கடந்த ஆண்டு அனுமதி பெறாமல் உள்நாட்டுப் போட்டிகளை தவற விட்டதற்காக இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மத்திய ஒப்பந்தங்களை இழந்தனர்.

சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே போட்டியைத் தவறவிட்டதற்கான எந்த காரணத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம், தேர்வாளர்களுக்கு வழங்கவில்லை. அவர் துபாயில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். தேர்வு குழுவினர் ஒரு சரியான காரணத்தை விரும்புவார்கள். இல்லையென்றால் ஒருநாள் போட்டிக்கு அவரைப் பரிசீலினை செய்வது கடினமாக இருக்கும்.

கேரள கிரிக்கெட் சங்கத்துடன் சாம்சனுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு அதை சரிசெய்ய வேண்டும். மாநில சங்கத்திற்கும் அவருக்கும் இடையே தவறான புரிதல் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சஞ்சு சாம்சன் சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றால் அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News