கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே டிராபி: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா

Published On 2025-01-16 22:13 IST   |   Update On 2025-01-16 22:13:00 IST
  • இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா, மகாராஷ்டிரா அணிகள் மோதின.
  • இதில் விதர்பா அணி வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வதோதரா:

32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று 2வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.

இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணியும் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த விதர்பா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 380 ரன்கள் குவித்தது. யாஷ் ரதோட் 116 ரன்னும், துருவ் ஷோரே 114 ரன்னும் எடுத்தனர்.

இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வரும் கருண் நாயர் 88 ரன்னும், ஜிதேஷ் சர்மா 51 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மகாராஷ்டிரா களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 90 ரன்னும், அன்கிட் பாவ்னே 50 ரன்னும் எடுத்தனர். நிகில் நாயக் 49 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இறுதியில், மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது யாஷ் ரதோடுக்கு வழங்கப்பட்டது.

நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதுகின்றன.

Tags:    

Similar News