அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும்: பிசிசிஐ அதிரடி
- அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்றது பிசிசிஐ.
- அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பயண விதிமுறைகளுக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும் என்றது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் 3-1 என தோல்வியை தழுவியது. இந்த தோல்விகளால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல்முறை இந்திய அணி வெளியேறியது. அத்துடன், 10 ஆண்டு கழித்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது.
இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது.
இந்திய வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.
இனி இந்திய வீரர்கள் முறையான அனுமதியின்றி தங்களது மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது.
எந்தத் தொடர்களுக்கும் பிசிசிஐ-யின் முறையான அனுமதி பெற்றே இனி குடும்பத்தாரை அழைத்துச் செல்லவேண்டும்.
வீரர்கள் அனைவரும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பயண விதிமுறைகளுக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஏற்கனவே இந்திய வீரர்கள் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் கம்பீர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.