வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஷகீல்- ரிஸ்வான் அரை சதம்: முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 143/4
- பாகிஸ்தான் அணி 46 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், குடகேஷ் மோடி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முல்தான்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஷான் மசூத்- முகமது ஹுரைரா களம் இறங்கினர். இதில் முகமது ஹுரைரா 6 ரன், ஷான் மசூத் 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த பாபர் அசாம் 8, கம்ரான் குலாம் 5 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 46 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து சாத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் திணறினர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பாகிஸ்தான் அணி 41.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.
பாகிஸ்தான் தரப்பில் சாத் ஷகீல் 56 ரன்னுடனும், முகமது ரிஸ்வான் 51 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், குடகேஷ் மோடி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.