தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்குமா ஆப்கானிஸ்தான்? சாம்பியன்ஸ் டிராபியில் இன்று மோதல்
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த செப்டம்பரில் நடந்த ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
- தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 27 ஆண்டுகள் ஆகிவிட்டது.
சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் குவித்தும் அவ்விரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய தென்ஆப்பிரிக்க அணி எழுச்சி பெற வேண்டிய சூழலில் இருக்கிறது.
தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 27 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. 1998-ம் ஆண்டு முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையை வசப்படுத்திய அந்த அணி நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்றால் முதலில் இன்றைய ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க வேண்டியது முக்கியமாகும். பந்துவீச்சில் ககிசோ ரபடா, யான்சென், கேஷவ் மகராஜ் மிரட்டினால் தென்ஆப்பிரிக்காவின் கை ஓங்கும்.
சாம்பியன்ஸ் கோப்பையில் அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கும் ஆப்கானிஸ்தான் அணி ரஷித்கான், முகமது நபி, நங்கேயலியா கரோட், நூர் அகமது ஆகிய சுழற்பந்து வீச்சை தான் அதிகம் சார்ந்து இருக்கிறது. பேட்டிங்கில் குர்பாஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இப்ராகிம் ஜட்ரன், குல்படின் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் அணி கடந்த செப்டம்பரில் சார்ஜாவில் நடந்த ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது. அதே போல் அதிர்ச்சி அளிக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள் என்பதால், பரபரப்புக்கு குறைவிருக்காது.