சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்காளதேசம்
- இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
- வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றையபோட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 10 ஓவர்களுக்குள் 50 ரன்களை குவிக்காமலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பிறகு, களமிறங்கிய அந்த அணியின் தவ்ஹித் ரிடோய் மற்றும் ஜேகர் அலி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. ஜேகர் அலி எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆக இருந்த நிலையில், ரோகித் சர்மா கேட்ச்-ஐ தவற விட்டதால் 114 பந்துகளை ஆடி 68 ரன்களை சேர்த்தார்.
மறுப்பக்கம் ரிடோய் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். இவர் 100 ரன்களை கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 228 ரன்களை சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.