சாம்பியன்ஸ் டிராபி: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய மைல்கல் கடந்து அசத்திய ரோகித் சர்மா
- 228 ரன்களை சேர்த்த வங்காளதேசம் அணி ஆல் அவுட் ஆனது.
- இந்தியா தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து 49.4 ஓவர்களில் 228 ரன்களை சேர்த்த வங்காளதேசம் அணி ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ரிடோய் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.
இந்தியா தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 229 ரன்களை துரத்தும் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். 261-வது போட்டியில் விளையாடி வரும் ரோகித் சர்மா இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை ரோகித் சர்மா தற்போது முந்தியுள்ளார்.
276வது போட்டியில் விளையாடும் போது சச்சின் டெண்டுல்கர் 11 ஆயிரம் ரன்களை கடந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் 222 இன்னிங்ஸில் விளையாடி 11 ஆயிரம் ரன்களை கடந்தார்.
இன்றைய போட்டியை பொருத்தவரை கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். தஸ்கின் அகமது வீசிய பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா ரிஷத் பிடித்த கேட்ச்-இல் விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார்.