உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறிய இந்தியா
- இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
- இந்திய அணி 50.00 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்தை பிடித்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது.
சிட்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்து வெளியேற்றப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி, 8 தோல்விகளை சந்தித்துள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் டிரா ஆனது. இதன் காரணமாக இந்திய அணி 50.00 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்தை பிடித்தது.
இதற்கு முன்பு நடைபெற்ற 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. 2019-21-ல் நியூசிலாந்து அணியிடமும், 2021-23-ல் ஆஸ்திரேலியா அணியிடமும் தோற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்தது.
சிட்னி டெஸ்ட் வெற்றி மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 11 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.