கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா

Published On 2025-02-04 13:29 IST   |   Update On 2025-02-04 13:29:00 IST
  • பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
  • விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி துவக்க வீரர் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்களை விளாசினார். இந்த சதம் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இவரது சதம் காரணமாக இந்திய அணி கடைசி டி20 போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அபிஷேக் சர்மா நிறைய சாதனைகளை முறியடித்தார். இந்த தொடரில் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் சர்மா, விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர்களில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா தற்போது விராட் கோலியை முந்தியுள்ளார். சமீபத்தில் நிறைவுபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மா ஒட்டு மொத்தமாக 279 ரன்களை விளாசியுள்ளார்.

முன்னதாக 2021-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விராட் கோலி 231 ரன்கள் எடுத்திருந்தார். ஒட்டுமொத்த சாதனையைப் பொறுத்தவரை, ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்டர்களின் பட்டியலில் திலக் வர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வெறும் 4 இன்னிங்ஸ்களில் இவர் 280 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்தியாவுக்காக ஒரே டி20 தொடரில் அதிக ரன்கள்:

280 ரன்கள் - திலக் வர்மா (4 இன்னிங்ஸ்) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2024

279 ரன்கள் - அபிஷேக் சர்மா (5 இன்னிங்ஸ்) இங்கிலாந்துக்கு எதிராக, 2025

231 ரன்கள் - விராட் கோலி (5 இன்னிங்ஸ்) இங்கிலாந்துக்கு எதிராக, 2021

224 ரன்கள் - கே.எல். ராகுல் (5 இன்னிங்ஸ்) நியூசிலாந்துக்கு எதிராக, 2020

Tags:    

Similar News