கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். 2025: லக்னோ அணி கேப்டன் ஆகிறார் ரிஷப் பண்ட்?

Published On 2025-01-19 13:09 IST   |   Update On 2025-01-19 13:09:00 IST
  • ஐ.பி.எல். ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.
  • கே.எல். ராகுல் டெல்லி அணிக்காக விளையாடுகிறார்.

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 21-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஐ.பி.எல். 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 3 சீசன்களில் லக்னோ அணி கேப்டனாக கே.எல். ராகுல் பணியாற்றி வந்தார்.

இதில் 2022 மற்றும் 2023 சீசன்களில் லக்னோ அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. கடந்த சீசனில் லக்னோ அணி 7-வது இடத்தை பிடித்தது. இதையடுத்து 2025 சீசனில் கே.எல். ராகுல் லக்னோ அணியில் இருந்து வெளியேறினார்.

ஐ.பி.எல். ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை அவர் பெற்றார். இந்த நிலையில், ரிஷப் பண்ட்-ஐ லக்னோ அணி கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக 2016-ம் ஆண்டு முதல் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2021-ல் இருந்து கேப்டனாக செயல்பட்டார். விபத்தில் ஏற்பட்ட காயத்தால் 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் விளையாடவில்லை. ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் தக்க வைத்துக் கொள்ள டெல்லி அணி முயற்சித்தது.

லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. டெல்லி அணி இதுவரை இந்த சீசனுக்கான கேப்டனை முடிவு செய்யவில்லை. 

Tags:    

Similar News