null
CSKvsMI போட்டி.. விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்.. குற்றச்சாட்டிய சிஎஸ்கே ரசிகர்கள்
- சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் காலி ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியானது.
- டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்படுவதாக சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சென்னை:
ஐபிஎல் தொடர் வருகிற 22-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
23-ந் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 :15 மணிக்கு தொடங்கியது.
டிஸ்ட்ரிக்ட் ஆப் மற்றும் இணையதளம் மூலமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணையதளம் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து காலை முதல் டிக்கெட்டுகளை பெறுவதற்காக சிஎஸ்கே அணி ரசிகர்கள் மொபைல் லேப்டாப் என அனைத்து சாதனங்களையும் வைத்து காத்துக் கொண்டிருந்தனர்.
டிக்கெட் விலை 1700 ரூபாய் ,2500 ரூபாய்,ரூ. 3500,ரூ. 4000 ரூபாய்,ரூ.7500 என்ற அளவு டிக்கெட் விற்பனை இருந்தது. இதில் ஏதேனும் ஒரு டிக்கெட்டையாவது பெற்றுவிடலாம் என சிஎஸ்கே ரசிகர்கள் போட்டி போட்டனர். ஆனால் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஏமாற்றுமே மிஞ்சியது.
வழக்கம் போல் உங்களுக்கு முன்பு பெரிய வரிசை காத்திருப்பதாக அந்த புக்கிங் தளத்தில் காட்டப்பட்டிருந்தது. இதில் சுமார் லட்சம் ரசிகர்கள் வரை தங்களது டிக்கெட் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சில மணி நேரத்திலேயே மீண்டும் டிக்கெட் அனைத்தும் காலி ஆகிவிட்டதாக அறிவிப்பு வெளியானது.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்த கிரிக்கெட் போட்டிகளை பார்க்க நேர்ந்தாலும், இதேபோல் ஒரு சூழல்தான் உருவாவதாகவும் 40 ஆயிரம் பேர் பார்க்கும் மைதானத்தில் பலருக்கும் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்றும் ரசிகர்கள் சாடி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் டிக்கெட்டுகள் குறைந்த அளவே விற்கப்படுவதாகவும் எஞ்சியிருக்கும் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கப்படுவதாகவும் சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். சிஎஸ்கே அணி நிர்வாகம் டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.