
null
9-வது வீரராக களமிறங்கிய தோனி.. வெற்றிக்காக விளையாடாத சிஎஸ்கே.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- சென்னையில் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய தோல்வியாகும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அஷ்வினுக்கு பிறகு தோனி 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கியது சிஎஸ்கே ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
7 ஓவரில் 100 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய நிலையில் சிவம் தூபே அவுட் ஆனதும் தோனி வராதது ஏன்? வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பே துளியும் இல்லாமல் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே விளையாடியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனி வருவதற்கு முன்னதாகவே அஸ்வின் (8 பந்தில் 11 ரன்கள்), ஜடேஜா (19 பந்தில் 25 ரன்கள்) களமிறங்கினர். அவர்கள் இருவரும் பெரிய அளவில் அதிரடியாக விளையாடவில்லை. 9-வது வீரராக களமிறங்கிய தோனி 16 பந்தில் 30 ரன்கள் குவித்தார்.
அவர்கள் இருவருக்கும் முன்பே தோனி களமிறங்கியிருந்தால் அவர் அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருப்பார் என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சிஎஸ்கே அணி வெற்றிக்காக விளையாடவில்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தோனியின் தீவிர ரசிகர்கள் சிலர் சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. தோனி சிக்ஸ் அடித்ததே போதும் எனவும் அவர் ஆட்டத்தை பார்த்ததே சந்தோஷம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.