
null
SRH-ஐ எதிர்கொள்ள தயார்: அவர்களுக்கு எதிராக சிறப்பு திட்டங்கள் வைத்துள்ளோம்- விப்ராஜ் நிகம்
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது.
- ஒரு போட்டியிலாவது 300 ரன்னைத் தொடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.
ஐபிஎல் 2025 சீசனில் நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக முதல் போட்டியில் 280 ரன்களுக்கு மேல் குவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோவிற்கு எதிராக 200 ரன்களை தொடமுடியவில்லை. லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி அபிஷேக் சர்மா, இஷான் கிஷனை ஒரே ஓவரில் வீழ்த்தினார். மொத்தம் 4 விக்கெட் சாய்த்தார்.
இந்த நிலையில் நாளைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள தயார். அவர்களுக்கு எதிராக சிறப்பு திட்டம் வைத்துள்ளோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் இளம் வீரர் விப்ராஜ் நிகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விப்ராஜ் நிகம் கூறுகையில் "சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிறந்த அணி என்பது உண்மைதான். சிறந்த பேட்டிங் ஆர்டர் வைத்துள்ளனர். பந்து வீச்சு கண்ணோட்டத்தில் எங்களுடைய அணி ஆலோசனைகள், பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் போட்டியின்போது வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக லக்னோ வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆகவே, நாளைய போட்டிக்கு அதுபோன்ற சில சிறந்த திட்டங்களை உருவாக்கியுள்ளோம். வரும் போட்டிகளில் அந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போட்டியிலேயே விப்ராஜ் நிகம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். மார்கிராம் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் 15 பந்தில் 39 ரன்கள் விளாசி 210 இலக்கை எட்டி லக்னோவிற்கு எதிராக வெற்றி பெற காரணமாக இருந்தார். அஷுடோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 7 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. விப்ராஜ் நிகம்- அஷுடோஷ் சர்மா ஜோடி 7ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தது.