கிரிக்கெட் (Cricket)
null

லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் பிரம்மாண்ட சாதனை படைத்த கருண் நாயர்

Published On 2025-01-03 15:58 GMT   |   Update On 2025-01-03 16:29 GMT
  • இந்த ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 3-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
  • இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

விசாகப்பட்டினம்:

இந்தியாவில் லிஸ்ட் ஏ தொடரான விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும் ரிங்கு சிங் தலைமையிலான உத்தர பிரதேசம் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேசம் அணி 50 ஓவர் முடிவில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வி 105 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து விளையாடிய விதர்பா அணி 47.2 ஓவரில் 313 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்பா அணியில் அதிக பட்சமாக யாஷ் ரத்தோட் 138 ரன்களும் கருண் நாயர் 112 ரன்களும் எடுத்தனர்.

கருண் நாயர் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்த தொடரில் இது அவரது 3-வது சதம் ஆகும். இதன் மூலம் இந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் மயங்க் யாதவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரோடு மூன்று சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் இணைந்துள்ளார்.

ஆனால், அவர் இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 5-வது போட்டியில் தான் ஆட்டமிழந்து இருக்கிறார். இந்த தொடரில் முதல் முறையாக விக்கெட் இழக்கும் வரை அவர் மொத்தமாக 542 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

லிஸ்ட் ஏ போட்டிகளில் தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் இருந்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை கருண் நாயர் படைத்துள்ளார்.

லிஸ்ட் ஏ வரலாற்றில் இதற்கு முன் ஆட்டம் இழக்காமல் 527 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபிராங்கிளின் 2010-ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். 14 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை கருண் நாயர் முறியடித்து இருக்கிறார். அவர் அடுத்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News