பரபரப்பான கட்டத்தில் புலவாயோ டெஸ்ட்: நான்காம் நாள் முடிவில் ஜிம்பாப்வே 203/8
- ஜிம்பாப்வே அணி வெற்றி பெற 278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட் வீழ்த்தினார்.
புலவாயோ:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 44.3 ஓவரில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, நியூமென் நியாமுரி தலா 3 விக்கெட்டும், முசாராபனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிரெய்க் எர்வின் 75 ரன்னும், சிக்கந்தர் ராசா 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஹ்மத்ஜாய் 3 விக்கெட்டும், பரீத் அஹ்மத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இக்கட்டான சூழலில் சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா சதமடித்து அணியை மீட்டார். சதத்தை எட்டிய ரஹ்மத் ஷா 139 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 278 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்து 53 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட்டும், ஜிய உர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதி நாளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 2 விக்கெட்டை வீழ்த்த வேண்டும், ஜிம்பாப்வே வெற்றி பெற 73 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.