ஓய்வு குறித்து மனம் திறந்து பேசிய எம்.எஸ். டோனி
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். டோனியை தக்கவைத்தது.
- டோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். சீசன் இதுதான்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி. கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த எம்.எஸ். டோனி அப்போது முதல் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக எம்.எஸ். டோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். சீசன் இதுதான் என்பது போன்ற தகவல்கள் அடிக்கடி வெளியாகும்.
கடந்த ஆண்டு இறுதியில் ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெறும் வரை எம்.எஸ். டோனி 2025 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். டோனியை தக்கவைப்பதாக அறிவித்த பிறகே, எம்.எஸ். டோனி ஓய்வு குறித்த பேச்சுகள் ஓரளவுக்கு ஓய்ந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.எஸ். டோனி தனது ஓய்வு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது, "நான் 2019-ல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். அதன் பிறகு தற்போது வரை நான் செய்து கொண்டிருப்பது எல்லாமே, கடைசிவரை கிரிக்கெட்டை கொண்டாட வேண்டும் என்பது தான். கடந்த சில ஆண்டுகளில், உங்களுக்கே தெரியும், என்னால் விளையாட முடியும் என்று. நான் பள்ளி சமயத்தில் இருந்ததை போல், அவற்றை கொண்டாடி மகிழ வேண்டும்."
"பள்ளி காலங்களில் தினமும் மாலை 4 மணி எனக்கு விளையாட்டு நேரம், நான் மகிழ்ச்சியாக வெளியில் சென்று கிரிக்கெட் விளையாடுவேன். சமயங்களில் வானிலை காரணமாக கிரிக்கெட் விளையாட முடியவில்லை எனில், நாங்கள் கால்பந்து விளையாடுவோம். அதே போன்ற அப்பாவித்தனமாக இப்போதும் விளையாட வேண்டும்," என்று தெரிவித்தார்.