கிரிக்கெட் (Cricket)

சொதப்பிய இந்தியா.. 36 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் வெற்றி பெற்ற நியூசிலாந்து

Published On 2024-10-20 07:05 GMT   |   Update On 2024-10-20 07:05 GMT
  • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.
  • இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாளில் ஆட்டம் நடந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து சார்பில் டெவான் கான்வே 91 ரன்களும், வில் யங் 33 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும்ம், டிம் சௌதி 65 ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா சார்பில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 52, விராட் கோலி 70, சர்ஃபராஸ் கான் 150, ரிஷப் பண்ட் 99 ரன்களை அடிக்க இந்திய அணி 462 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 107 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நியூசிலாந்து அணி களமிறங்கியது.

துவக்கத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறிய நியூசிலாந்து அணி மிக கவனமாக ஆடி வந்தது. அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இவருடன் களமிறங்கிய டெவான் கான்வே 17 ரன்களில் அவுட் ஆனார்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் அந்த அணி முதல் டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சார்பில் வில் யங் 48 ரன்களையும் ரச்சின் ரவீந்திரா 39 ரன்களையும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Tags:    

Similar News