பாகிஸ்தானைப் பந்தாடிய நியூசிலாந்து: டி20 தொடரை 3-1 என கைப்பற்றியது
- முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டது.
மவுண்ட் மனுவா:
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் 2-1 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி மவுண்ட் மனுவாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி 20 பந்தில் 50 ரன்களில் அவுட்டானார். டிம் செய்பர்ட் 22 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் 26 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராவத் 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்தின் துல்லிய பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.
அப்துல் சமது 44 ரன்னும், இர்பான் கான் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 3-1 என கைப்பற்றியது.
நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டும், ஜகாரி போக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.