கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபியால் ரூ.869 கோடி இழப்பு- வீரர்களின் சம்பளத்தில் கைவைக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Published On 2025-03-17 19:03 IST   |   Update On 2025-03-17 19:03:00 IST
  • பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் அறைகள் வழங்கப்படாது.
  • ஒரு மாற்று வீரருக்கு இதற்கு முன் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தால் தற்போது அவருக்கு 125 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.

இஸ்லாமாபாத்:

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்று நடத்தியது. சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால், இதற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலையைத் தாண்டி அதிக செலவு செய்யப்பட்டது.

சுமார் 869 கோடி ரூபாயை இந்த தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலவிட்டது. இவ்வளவு பணத்தை வாரி இறைத்த நிலையில், இந்தத் தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.52 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக அளித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் அமைப்பு.

இந்த தொடரை நடத்துவதற்கான கட்டணம் மற்றும் டிக்கெட் விற்பனை வருவாய் என அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 52 கோடி மட்டும்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 739 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இது யாரும் எதிர்பாராத மிகப் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக பாகிஸ்தான் நாட்டில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட் ஆடி வரும் பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தில் 90 சதவீதத்தை குறைத்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

மேலும், போட்டிகளில் விளையாடாத மாற்று வீரர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட சம்பளத்தில் இனி 12.50 சதவீதம் மட்டுமே சம்பளமாக அளிக்கப்படும் என கூறப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு மாற்று வீரருக்கு இதற்கு முன் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு இருந்தால் தற்போது அவருக்கு 125 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்.

மேலும், இனி பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வசதியான ஹோட்டல்களில் அறைகள் வழங்கப்படாது. அவர்கள் சாதாரண விடுதிகளில் தான் இனி தங்க வேண்டும். பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மிக மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், சர்வதேச தரத்தில் மைதானங்களைத் தயார் செய்துவிட்டு உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை மேலும் பலவீனமானதாக மாற்றி இருக்கிறது பாகிஸ்தான்.

Tags:    

Similar News