கிரிக்கெட் (Cricket)

யுவராஜ் சிங்கை அணியிலிருந்து கழற்றி விட்டது கோலி தான்- முன்னாள் சிஎஸ்கே வீரர் விமர்சனம்

Published On 2025-01-10 20:57 IST   |   Update On 2025-01-10 20:57:00 IST
  • பிட்னஸ் சோதனையில் தமக்கு 2 புள்ளிகளை குறைத்துக் கொள்ளுமாறு யுவராஜ் கேட்டுக்கொண்டார்.
  • யுவராஜ் இந்திய அணியில் முன்பு போல் நடத்தப்படவில்லை.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் புற்றுநோயையும் வென்று மீண்டும் நாட்டுக்காக விளையாடினார். இருப்பினும் அவரால் முன்பு போல் அசத்த முடியவில்லை. அதன் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர், 2019-ம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனிதான் யுவராஜ் சிங்கை கழற்றி விட்டு அவரின் கெரியரை முடித்ததாக சில முன்னாள் வீரர்களும் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் விமர்சித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தான் யுவராஜ் சிங்கை கழற்றி விட்டதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலியின் கேப்டன்ஷிப் ஸ்டைல் நீங்கள் அவருடைய தரத்துக்கு நிகராக இருக்க வேண்டும் என்பது போல் இருக்கும். பிட்னஸ், சாப்பாடு, கேட்பது, ஒப்புக் கொள்வது உட்பட அனைத்தும் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இங்கே இரண்டு வகையான கேப்டன்கள் உண்டு. ஆனால் தனிப்பட்ட நபர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது வித்தியாசமானது.

எடுத்துக்காட்டாக யுவியை எடுத்துக் கொள்ளுங்கள். புற்றுநோயை தோற்கடித்த அந்த மனிதர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் கம்பேக் முயற்சி செய்தார். அவர் மற்ற வீரர்களுடன் சேர்ந்து நமக்கு 2 உலகக்கோப்பைகளை வென்று கொடுத்தார். அந்த 2 வெற்றிகளில் அவருடைய பங்கு அளப்பரியது. அப்படிப்பட்ட ஒரு வீரருக்கு நீங்கள் கேப்டனாகும்போது அவருடைய நுரையீரல் திறன் குறைந்து விட்டது என்று அவரிடம் சொல்கிறீர்கள். உண்மையில் தடுமாறிய அவருக்கு நீங்கள்தான் ஆதரவாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் கேப்டனான நீங்கள் அதை செய்யாமல் உங்களுடைய அளவீடுகளை மட்டுமே பார்த்தீர்கள். உண்மையில் யுவராஜ் போன்ற சில வீரர்களுக்கு விதிமுறைகளில் இருந்து விலக்குகள் இருக்கும். அவர் அந்த வாய்ப்புக்கு தகுதியானவர். ஏனெனில் அவர் உலகக்கோப்பைகளை மட்டுமின்றி புற்றுநோயையும் வீழ்த்தியவர். அதனால் பிட்னஸ் சோதனையில் தமக்கு 2 புள்ளிகளை குறைத்துக் கொள்ளுமாறு யுவராஜ் கேட்டுக்கொண்டார்.

பின்னர் பிட்னஸ் சோதனையில் தேர்வாகி அணிக்குள் வந்த அவர் கொஞ்சம் சுமாராக செயல்பட்டார். அப்போதிலிருந்து யுவராஜ் இந்திய அணியில் முன்பு போல் நடத்தப்படவில்லை. அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த விராட் கோலி வலுவான ஆளுமை கொண்டவராக இருந்தார். எனவே அந்த சூழ்நிலை அவராலேயே ஏற்பட்டிருக்கும். விராட் தலைமையில் நான் விளையாடியதில்லை.

ஆனால் அவர் எப்போதும் தன்னுடைய வழியில் அனைவரும் உயர்தரமாக செயல்பட வேண்டும் என்று விரும்புவார். இருப்பினும் உங்கள் அனைத்து வீரர்களும் அப்படியே இருக்க மாட்டார்கள். எனவே அவர்களை தனிப்பட்ட முறையில் எப்படி நடத்துகிறீர்கள் என்பது முக்கியம். ஏனெனில் இவை அனைத்தும் வெற்றிகளை மட்டுமே பொறுத்தது கிடையாது.

என்று உத்தப்பா கூறினார்.

Tags:    

Similar News