null
இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா: கேப்டனாக டோனி, கோலி சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
- தோனி, விராட்கோலி தலைமையில் தலா 3 ஒருநாள் தொடர் ஒயிட்வாஷ் செய்யப்பட்டு இருந்தது.
- ரோகித்சர்மா 'ஒயிட்வாஷ்' செய்த 4 அணிகளுமே வெவ்வேறானவை.
அகமதாபாத்:
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 356 ரன் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 34.2 ஓவரில் 214 ரன்னில் சுருண்டது. இதனால் 142 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் 2 ஆட்டத்திலும் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்ததன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா புதிய வரலாறு படைத்தார்.
அவரது தலைமையில் இந்திய அணி 4-வது முறையாக ஒருநாள் போட்டியில் எதிர் அணியை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது. 2022-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசையும், 2023-ல் இலங்கை மற்றும் நியூசிலாந்தையும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டித் தொடரை முழுமையாக கைப்பற்றி இருந்தது.
தோனி, விராட் கோலி தலைமையில் தலா 3 ஒருநாள் தொடர் ஒயிட்வாஷ் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ரோகித்சர்மா அதை முந்தி சாதனை புரிந்தார். ரோகித்சர்மா 'ஒயிட்வாஷ்' செய்த 4 அணிகளுமே வெவ்வேறானவை.
ரோகித்சர்மா 2017-ம் ஆண்டு வெள்ளை நிற பந்து போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2022-ல் டெஸ்டுக்கு கேப்டன் ஆனார். 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் கேப்டனாக நீடித்து வருகிறார்.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. 2008-ம் ஆண்டு 0-5 என்ற கணக்கில் 2011-ம் ஆண்டு 0-5 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகி இருந்தது.