null
கேப்டனாக அதிக வெற்றி: கங்குலி சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
- எல்லா விடிவிலான கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 98 போட்டிகளில் வெற்றி.
- 50 ஒருநாள் போட்டிகளில் 36-ல் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது ஒருநாள் போட்டி நேற்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது. என்றபோதிலும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 119 ரன்கள் விளாச, இந்தியா 44.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் சவுரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரோகித் சர்மா.
எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் கங்குலி தலைமையில் இந்திய அணி 97 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய வெற்றியின் மூலம் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 98 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த வரிசையில் எம்.எஸ். டோனி முதல் இடத்திலும், விராட் கோலி 2-வது இடத்திலும், முகமது அசாருதீன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
எம்.எஸ். டோனி தலைமையில் இந்திய அணி 332 போட்டிகளில் விளையாடி 179-ல் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி 213 போட்டிகளில் விளையாடி 137-ல் வெற்றி பெற்றுள்ளது. முகமது அசாருதீன் தலைமையில் இந்திய அணி 221 போட்டிகளில் விளையாடி 104-ல் வெற்றி பெற்றுள்ளது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 136 போட்டிகளில் விளையாடி 98-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 50 போட்டிகளில் விளையாடி 36-ல் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் ஒருநாள் போட்டியில் வெற்றி சராசரி அதிகம் வைத்துள்ள கேப்டன்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடம் பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிளைவ் லாய்டு 76.19 சராசரியுடன் முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 72 சராசரியுடன் 2-வது இடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங் 71.73 சராசரியுடன் 3-வது இடத்தில் உள்ளார்.