புலவாயோ டெஸ்ட்: நான்காம் நாள் முடிவில் ஜிம்பாப்வே 187/7
- அயர்லாந்து 2வது இன்னிங்சில் 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 187 ரன்கள் எடுத்தது.
புலவாயோ:
ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.
அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பால்பிரின் 66 ரன்னும், லார்கன் டக்கர் 58 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த அணியின் வெஸ்லி மாதவரே ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். பிரியன் பென்னட் 45 ரன்கள் சேர்த்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது.
நான்காம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.
மீதம் ஒருநாள் உள்ள நிலையில் 109 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே அணியும், 3 விக்கெட் எடுத்தால் அயர்லாந்து அணியும் வெற்றி பெறும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.