மரியாதைக்கு தகுதியானவர்.. ஒருபோதும் ரோகித்தை கைவிடக்கூடாது.. பிசிசிஐ-யை சாடிய சித்து
- இது போன்ற வேடிக்கையான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது.
- மார்க் டைலர், முகமது அசாருதீன் போன்ற கேப்டன்கள் ஒரு வருடத்திற்கு மேல் மோசமான பார்மில் இருந்ததை நான் பார்த்துள்ளேன்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் அடுத்த 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது. அதற்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையில் அணியின் நலனுக்காக 5-வது போட்டியில் ரோகித் சர்மா விலகிக் கொண்டார்.
அதன் வாயிலாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரராக ஆகியுள்ளார்.
இந்நிலையில் ரோகித் சர்மா அதிகமான மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு தகுதியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து இந்திய அணியை கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு கேப்டன் தொடரின் பாதியிலேயே நீக்கப்படக் கூடாது. பாதியிலேயே வெளியேறும் வாய்ப்பையும் கொடுக்கக் கூடாது. இது மற்றவர்களுக்கு தவறான அறிகுறியை கொடுக்கும். இதற்கு முன் மார்க் டைலர், முகமது அசாருதீன் போன்ற கேப்டன்கள் ஒரு வருடத்திற்கு மேல் மோசமான பார்மில் இருந்ததை நான் பார்த்துள்ளேன்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோகித் சர்மா அணி நிர்வாகத்திடம் இருந்து இன்னும் அதிகமான மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு தகுதியானவர். இது போன்ற வேடிக்கையான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 தொடர்களில் சுமாராக விளையாடியதற்காக அவரை நீக்கியது சரியல்ல. இது அணி நிர்வாகத்திடம் மிகவும் மோசமான முடிவு. முழுமையாக நம்பவில்லையெனில் ஏன் ஆரம்பத்திலேயே கேப்டனாக ரோகித்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். விழுந்த கலங்கரை விளக்கம் பாறையை விட ஆபத்தானது.
என்று கூறினார்.