ஆஸி.-க்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் முகமது ஷமி இடம் பெறுவாரா?- அப்டேட் கொடுத்த பிசிசிஐ
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் காயத்தால் விளையாடாமல் உள்ளார்.
- காயம் குணமடைந்த நிலையிலும், முழு உடற்தகுதி பெறவில்லை.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. குறிப்பாக டெஸ்ட் போட்டியில் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸிவ்ங் செய்வதில் வல்லவர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதில் இருந்து அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்து காயம் முழுமையாக குணமடைந்த நிலையில் பயிற்சியை தொடங்கினார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மேற்கு வங்க அணிக்காக விளையாடினார்.
இதனால் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் ஐந்து நாட்கள் விளையாடும் அளவிற்கு உடற்தகுதி பெற வேண்டும் என அணி நிர்வாகம் தெரிவித்தது.
இதனால் முதல் மூன்று போட்டிகளில் முகமது ஷமி இடம் பிடிக்கவில்லை. கடைசி இரண்டு போட்டியிலாவது விளையாடுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில்தான் பிசிசிஐ அவரது உடற்தகுதி குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளது. அவர் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்மாட்டார் எனத் தெரிவித்துள்ளது.
இந்திய அணியில் இடம் பெறுவதற்காக சையத் முஷ்டாக் அலியின் 9 போட்டிகளிலும் இடம் பிடித்தார். விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கெதிராக கடந்த சனிக்கிழமை விளையாட இருந்தார். கடைசி நேரத்தில் களம் இறங்கவில்லை.
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் "தற்போதுள்ள மருத்துவ மதிப்பீடு அப்படையில், பிசிசிஐ மருத்துவக் குழு, அவருடைய மூட்டு முழு உத்வேகத்தில் பந்து வீச இன்னும் நேரம் எடுத்துக் கொள்ளும் என தீர்மானித்துள்ளது. இதனால் மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான உடற்தகுதியில் உள்ளார் என கருதப்படமாட்டார்.
டெஸ்ட் போட்டியில் பந்து வீசுவதற்கான வகையில் அவரது பந்து வீச்சை இன்னும் அதிகரிக்க வேண்டும். விஜய் ஹசாரே போட்டியில் அவர் பந்து வீசுவதை பொறுத்து கணக்கிடப்படும். அதேவேளையில் அறுவை சிகிச்சை காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.