கிரிக்கெட் (Cricket)

வீடியோ: மீண்டும் மீண்டுமா.. சர்ச்சையை கிளப்பிய வாஷிங்டன் சுந்தர் அவுட்.. கடுப்பான ரசிகர்கள்

Published On 2025-01-03 10:07 GMT   |   Update On 2025-01-03 10:07 GMT
  • வாஷிங்டன் சுந்தர் 14 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
  • மூன்றாம் நடுவர் கொடுத்த அவுட் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி இன்னிங்சின் 66-வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை லெக் சைடில் வைடராக வீச, அதனை அடிக்க முயன்ற வாஷிங்டன் சுந்தர் பேட்டை சுழற்றினார். ஆனால் பந்து விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது.

பந்து வாஷிங்டன் சுந்தரின் கையுறை அருகில் இருந்து வந்ததால் விக்கெட் கீப்பார் அலெக்ஸ் கேரி கள நடுவரிடம் அவுட் என அப்பில் செய்தார். ஆனால் கள நடுவர் நாட் அவுட் என்று அறிவித்த நிலையில், கேப்டன் கம்மின்ஸ் மூன்றாம் நடுவரிடம் முறையிட்டார்.

மூன்றாம் நடுவரின் சோதனையில் பந்து வாஷிங்டன் சுந்தர் கையுறையை கடந்த பிறகே ஸ்னிக்கோ மீட்டரில் சில அதிர்வுகள் பதிவானது தெரிந்தது. இருப்பினும் மூன்றாம் நடுவர் பலமுறை சோதித்த பிறகு வாஷிங்டன் சுந்தருக்கு அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். இதனால் ஏமாற்றமடைந்த சுந்தர் களநடுவர்களிடம் சில வார்த்தைகளை கூறி பெவிலியனுக்கு திரும்பினார்.

அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ராவும் கள நடுவரிடம் கடந்த போட்டியில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். இதனால் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.


ஏனெனில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலும் இதே முறையில் தனது விக்கெட்டை இழந்தது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் ரசிகர்கள் இது குறித்து ஆஸ்திரேலிய அணி உள்பட நடுவர்களையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News