null
விவாகரத்து விவகாரம்: சாஹல் வைத்துள்ள இன்ஸ்டா ஸ்டோரி வைரல்
- சட்டரீதியிலான நடைமுறைகள் நிறைவுபெறுவதாக தகவல்.
- பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் சமீப காலங்களில் தனித்தனியே வசிப்பதாகவும், இருவரின் விவாகரத்து தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
சாஹல் மற்றும் தனஸ்ரீ இடையிலான விவகாரத்து தொடர்பாக சட்டரீதியிலான நடைமுறைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவுபெறுவதாக புதிய தகவல் வெளியானது. முன்னதாக சாஹல் மற்றும் தனஸ்ரீ ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.
மேலும், சாஹல் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து மனைவி தனஸ்ரீயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே இருவரும் பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதுப்பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில், "நான் கணக்கில் வைக்க முடியாத அளவுக்கு பலமுறை கடவுள் என்னை பாதுகாத்துள்ளார். இதனால் நான் எத்தனை முறை காப்பாற்றப்பட்டேன் என்று எனக்கே தெரியாததை தான் நினைத்துப் பார்க்க வேண்டும். எனக்கே தெரியாத அளவுக்கு என்னுடன் இருந்ததற்கு கடவுளுக்கு மிக்க நன்றி. ஆமென்," என குறிப்பிட்டுள்ளார்.