இந்தியாவின் நம்பர் 1 வீரர் ஆனார் குகேஷ்
- விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு சென்றார்.
- அர்ஜூன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் FIDE தரவரிசையில் அதிவேகமாக முன்னேறி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அவர் FIDE தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நிலையில், FIDE தரவரிசையில் 2784 புள்ளிகளுடன் முன்னேற்றம் கண்டுள்ளார். சமீபத்தில் தியான் சந்த் கேல் ரத்னா விருது வென்ற குகேஷ், விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு வந்து, விளையாடி வருகிறார்.
இந்த முன்னேற்றம் காரணமாக நீண்ட காலமாக அதிக புள்ளிகளை கொண்ட இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசியை தற்போது குகேஷ் முந்தியுள்ளார். இதன் காரணமாக அர்ஜூன் தற்போது 2779.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் உலகளவில் முதலிடத்தில் தொடர்கிறார். இவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா (2802) மற்றும் அவரது சக நாட்டு வீரர் ஃபேபியானோ கருவானா (2798) ஆகியோர் இரண்டு மற்று் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக பட்டத்தை வென்றதில் இருந்து குகேஷ் சிறப்பான ஃபார்மில் உள்ளார்.