கால்பந்து
null

அறிமுக சீசனில் அதிக கோல்: ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் சாதனையை முறியடிக்கும் எம்பாப்வே

Published On 2025-03-17 16:59 IST   |   Update On 2025-03-17 17:00:00 IST
  • ரியல் மாட்ரிட் அணிக்காக அறிமுக சீசனில் இதுவரை 31 கோல்கள் அடித்துள்ளார்.
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிமுக சீசனில் 33 கோல்கள் அடித்திருந்தார்.

பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து கடந்த ஆண்டு ரியல்மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார்.

2024-25 அவருடைய அறிமுக சீசன். முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் சறுக்கினாலும் அதன்பின் அபாரமாக விளையாடி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர முன்கள வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அறிமுக சீசனில் இதுவரை ரியல்மாட்ரிட் அணிக்காக 31 கோல்கள் அடித்துள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர். இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய அறிமுக சீசனில் 33 கோல்கள் அடித்திருந்தார். இந்த சாதனையை முறியடிக்க எம்பாப்பேவுக்கு இன்னும் 3 கோல்கள் தேவை. இதனால் ரொனால்டோ சாதனையை முறியடித்து விடுவார். ஏற்கனவே பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ நசோரியா (30 கோல்- 2002-03) சாதனையை முறியடித்துள்ளார்.

இது தொடர்பாக எம்பாப்வே கூறுகையில் "நான் ரொனால்டோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரைவிட அதிக கோல்கள் அடித்தாலும், நான் சிறந்த வீரர் என்று அர்த்தம் கிடையாது. என்னுடைய முதல் சீசன் சிறப்பாக இருந்தது அவ்வளவுதான்.

கோல் அடிப்பது முக்கியமானது. ஆனால் அதைவிட லா லிகா, சாம்பியன்ஸ் லீக் மற்றும் கோபா டெல் ரே ஆகியவற்றை வெல்வது சிறந்தது. ரியல் மாட்ரிட் அணிக்காக தன்னை மாற்றிக் கொள்வதற்கான காலம் முடிவடைந்துவிட்டது. தற்போது என்னுடைய திறனை வெளிக்காட்டும் நேரம் இது. இங்கே சிறப்பாக விளையாட விரும்புகிறேன். இந்த சீசனில் முத்திரை பதிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு எம்பாப்வே தெரிவித்துள்ளார்.

எம்பாப்வே இந்த சீசனில் இன்று 12 போட்டிகளில் விளையாட உள்ளார். சிலியை சேர்ந்த ஜமோரானோவின் 37 கோல் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. இவர் 1992-ல் செவியா அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். அறிமுக சீசனில் 37 கோல்கள் அடித்திருந்தார்.

Tags:    

Similar News