விளையாட்டு

3 ஒருநாள் போட்டி தொடர்- நாளை 2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி தொடர வெல்ல இந்தியா ஆர்வம்

Published On 2025-02-08 10:06 IST   |   Update On 2025-02-08 10:06:00 IST
  • கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
  • தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தால் குல் தீப் யாதவ் நீக்கப்படலாம்.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1என்ற கணக்கில் கைப்பற்றியது.

3 ஒருநாள் போட்டி தொடரில் நாக்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நாளை (9-ந்தேதி) நடக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலி முதல் போட்டியில் விளையாடவில்லை. நாளைய ஆட்டத்துக்கு உடல் தகுதி பெறுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. கோலி இடத்தில் ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதே போல கே.எல். ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஒருவேளை அவர் நீக்கப்பட்டால் ரிஷப்பண்ட் இடம் பெறுவார்.

ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா அக்ஷர் படேல் ஆகியோர் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளனர். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தால் குல் தீப் யாதவ் நீக்கப்படலாம். வேகப்பந்தில் மாற்றம் இருக்காது.

இங்கிலாந்து அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்து விடும் ஏற்கனவே அந்த அணி 20 ஓவர் தொடரை இழந்து விட்டது. இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 108 ஆட்டத்தில் இந்தியா 59-ல், இங்கிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணிவீரர்கள் விவரம்:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்) , ஜெய்ஸ் வால், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், ரிஷப்பண்ட், ஹர் திக் பாண்ட்யா, அக் ஷர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் , ஹர்சித் ராணா, முகமது ஷமி, அர்ஷ் தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், லிவிங்ஸ் டன், ஜேக்கப் பெதல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோப்ரா ஆர்ச்சர், சகீப் மக்மூத், ஜேமி சுமித், ஒவர்டன், ரேகான் அகமது, அட்கின்சன், மார்க் வுட்.

Tags:    

Similar News