3 நாடுகள் கிரிக்கெட்: பாகிஸ்தான் - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
- 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டி இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் 6 புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். எஸ்.ஏ.லீக் 20 ஓவர் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. அது முடிந்ததும் முன்னணி வீரர்கள் தென்ஆப்பிரிக்க அணியுடன் இணைவார்கள்.
முத்தரப்பு தொடரில், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதலாவது லீக்கில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மல்லுக்கட்டுகின்றன. உள்ளூர் அணியான பாகிஸ்தானில் கேப்டன் முகமது ரிஸ்வான், பாபர் அசாம், பஹர் ஜமான், சல்மான் ஆஹா, கம்ரான் குலாம், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியில் கேப்டன் மிட்செல் சான்ட்னெர், டிவான் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், வில் யங், டேரில் மிட்செல் என திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கும் அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 116 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 61-ல் பாகிஸ்தானும், 51-ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' யில் முடிந்தது. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.