பங்களாதேஷ் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வென்றது தமிம் இக்பால் அணி
- முதலில் ஆடிய சிட்டகாங் அணி 20 ஓவரில் 194 ரன்கள் குவித்தது.
- பர்வேஸ் ஹொசைன், கவாஜா நபே அரை சதம் அடித்தனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பார்ச்சுன் பாரிஷல், சிட்டகாங் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்ச்சுன் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சிட்டகாங் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.
பர்வேஸ் ஹொசைன் 78 ரன்னும், கவாஜா நபே 66 ரன்னும், கிரஹாம் கிளர்க் 44 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பார்ச்சுன் அணி களமிறங்கியது. கேப்டன் தமிம் இக்பால் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். கைல் மேயர்ஸ் 46 ரன்னும், ஹ்ருடோய் 32 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பார்ச்சுன் அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் பார்ச்சுன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசன் மிராசுக்கு வழங்கப்பட்டது.