ஆசியாவிலேயே... ஆஸ்திரேலியாவுக்காக... சதம் விளாசி சாதனை படைத்த ஸ்மித்
- இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசியுள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஜோரூட் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார்.
காலே:
இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதே காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 257 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டீஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், எம் குஹ்னேமன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹேட் 21, கவாஜா 36, லெபுசென் 4 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர். ஸ்மித்துக்கு இது 36-வது டெஸ்ட் சதம் ஆகும்.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரராக ஸ்மித் பல சாதனைகளை படைத்துள்ளார்.
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் (36 சதம்), ஜோரூட் (36 சதம்) ஆகியோரின் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 4 இடங்கள் முறையே சச்சின் (51), கல்லீஸ் (45), பாண்டிங் (41), சங்ககாரா (38) ஆகியோர் உள்ளனர்.
மற்றொரு சாதனையாக ஆசியாவில் அதிக ரன்கள் விளாசிய ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஆசியாவில் பாண்டிங் 48 இன்னிங்ஸ்களில் 41.97 சராசரியுடன் 1889 ரன்கள் குவித்திருந்தார். அந்த சாதனை ஸ்மித் 42 இன்னிங்ஸ்களில் 51.08 என்ற சாராசயில் முறியடித்துள்ளார்.
மேலும் ஆசியாவில் அதிக சதங்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் என்ற ஆலன் பார்டர் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.
ஆசியாவில் அதிக சதங்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர்கள் விவரம்:-
ஸ்டீவன் ஸ்மித் - 7
ஆலன் பார்டர் - 6
கவாஜா - 5
ரிக்கி பாண்டிங் - 5