ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
- பஞ்சாப் அணி நிலையற்ற ஆட்டத்தால் தடுமாறுகிறது.
- பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், சாம் கர்ரன், அர்ஷ்தீப் சிங், ரபடா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
கொல்கத்தா:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.
முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு (2 முறை) டெல்லி, லக்னோ அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (சென்னை, ராஜஸ்தானிடம்) 10 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் சுனில் நரின் (286 ரன்), பில் சால்ட் (249), ஆந்த்ரே ரஸ்செல், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங் ஆகியோர் அதிரடி காட்டுகிறார்கள். பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஆல்-ரவுண்டர்கள் சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் வலுசேர்க்கிறார்கள். அதிக விலைக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
பஞ்சாப் அணி நிலையற்ற ஆட்டத்தால் தடுமாறுகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றதும் இதில் அடங்கும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டும் பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் பஞ்சாப்புக்கு வாழ்வா-சாவா? போன்றது.
அந்த அணியில் பேட்டிங்கில் பின்வரிசை வீரர்களான ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா அவ்வப்போது கலக்குகிறார்கள். தொடக்க மற்றும் மிடில் வரிசை பேட்டிங் வலுவற்றதாக இருப்பது பாதகமான அம்சமாகும். பிரப்சிம்ரன் சிங், லிவிங்ஸ்டன், ரோசவ், பேர்ஸ்டோ ஆகியோர் தொடர்ந்து சொதப்புகிறார்கள். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை. அடுத்த ஆட்டத்திற்கு முன்பாக அவர் உடல்தகுதியை எட்டி விடுவார் என்று நம்புவதாக பஞ்சாப் பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி நேற்று தெரிவித்தார்.
பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், சாம் கர்ரன், அர்ஷ்தீப் சிங், ரபடா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார் ஏற்றம் கண்டால் மேலும் பலம் சேர்க்கும்.
நடப்பு தொடரில் 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கும் கொல்கத்தா அணி தனது மின்னல்வேக பேட்டிங்கை தொடர ஆர்வம் காட்டும். அதே நேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 21 ஆட்டத்திலும், பஞ்சாப் 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரின், ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங் அல்லது வைபவ் அரோரா, மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ரோசவ் அல்லது பேர்ஸ்டோ, சாம் கர்ரன் (கேப்டன்) லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.