டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ்: முதல் சுற்றில் உலக சாம்பியன் குகேஷ் வெற்றி
- குகேஷ் நேரடியாக போட்டியில் கலந்து கொண்டார்.
- முதல் சுற்றின் மற்ற போட்டிகளும் சமனில் முடிந்தன.
நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தினார். முதல் சுற்றில் ஹாலந்தை சேர்ந்த அனிஷ் கிரியை எதிர்கொண்டு விளையாடிய குகேஷ் கடினமாக சென்ற போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றியை பதிவு செய்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) கேல் ரத்னா விருதை பெற்றுக் கொண்ட குகேஷ் நேரடியாக ஆம்ஸ்டர்டாம் வந்தடைந்தார். போட்டியின் முதல் சுற்று தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பு வந்த குகேஷ் நேரடியாக போட்டியில் கலந்து கொண்டார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆரம்பத்தில் இருந்து பின்தங்கினார். துவக்கம் முதலே அனிஷ் கிரி சிறப்பாக காய்களை நகர்த்தினார். போட்டியின் 33-வது நகர்த்தலில் சிறு தவறு செய்ய, குகேஷ் தோல்வியை தழுவ இருந்தார். பின்னர் 35-வது நகர்த்தலில் அனிஷ் கிரி தவறாக காய் நகர்த்த போட்டியின் நிலை தலைகீழாக மாறியது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட குகேஷ் 42-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் இந்திய வீரர்களான பி. ஹரிகிருஷ்ணா மற்றும் உலகின் நான்காம் நிலை வீரர் அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்டு விளையாடினார். இந்தப் போட்டியில் ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் அப்துசட்டோரோ மோதினர். கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் டிராவில் முடிந்தது. நடப்பு சாம்பியனான சீனாவின் வெய் யி, முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவுடன் டிராவில் முடிந்தது.
இதே போல் முதல் சுற்றின் மற்ற போட்டிகளும் சமனில் முடிந்தன. லியோன் லூக் மென்டோன்கா மற்றும் வின்சென்ட் கீமர் இடையிலான போட்டியில் லியோன் லூக் வெற்றி பெற்றார்.