ஐபிஎல் 2-வது தகுதி சுற்று- ஐதராபாத்துடன் மோதுவது ராஜஸ்தானா? பெங்களூருவா?
- ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.
- ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவது 4-வது முறையாகும்.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியின் பிளே அப் சுற்று நேற்று தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ந் தேதி நடைபெறும். குவா லிபையர்-2 ஆட்டத்தில் (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) விளையாடும். ஐதராபாத்துடன் இந்த போட்டியில் மோத போகும் அணி எது என்பது இன்று இரவு தெரியும்.
அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்-டூப்ளசி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி 'குவாலிபையர்-2' ஆட்டத்தில் ஐதராபாத்துடன் மோதும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.
ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவது 4-வது முறையாகும். இதில் 2013-ல் ஐதராபாத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2015-ல் பெங்களூரிடம் 71 ரன் வித்தியாசத்திலும், 2018-ல் கொல்கத்தாவிடம் 25 ரன்னிலும் தோற்றது.
பெங்களூரு அணி 5-வது தடவையாக எலிமினேட்டரில் ஆடுகிறது. 2015-ல் ராஜஸ்தானையும், 2022-ல் லக்னோவையும் (14 ரன்) தோற்கடித்தது.
2020-ல் ஐதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2021-ல் கொல்கத்தாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.