செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விரிசல் ஏற்பட்டுள்ள ராஜகோபுரத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர் குழு ஆய்வு

Published On 2016-07-23 10:49 IST   |   Update On 2016-07-23 10:49:00 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விரிசல் ஏற்பட்டுள்ள ராஜகோபுரத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர் குழு ஆய்வு செய்ய திருவண்ணாமலைக்கு வர உள்ளனர்.
திருவண்ணாமலை:

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், பேகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் என 4 கோபுரங்கள் உள்ளன.

தமிழகத்தில் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்திற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம்தான் மிகப்பெரியதாகும். இந்த கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாக விளங்குகிறது.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ரூ.8 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

இதையடுத்து ரூ.86 லட்சம் செலவில் ராஜகோபுரத்தில் வர்ணம் அடிக்கும் பணி, புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கோபுரத்தில் உள்ள 13 நிலைகளில் உட்புறத்தில் கற்களை இணைக்கும் மரத்தூளங்கள் எனப்படும் பெரிய மரத்தடிகள் பழுதடைந்து காணப்பட்டன. அவற்றை மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கோபுரத்தின் எடையை தாங்கக்கூடிய பிரதான ராட்சத கல்தூண் ஒன்றில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்தபதி அது குறித்து கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியாவிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ராஜகோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரடி ஆய்வு நடந்த ஐ.ஐ.டி. பேராசிரியர் குழுவினர் விரைவில் திருவண்ணாமலைக்கு வர உள்ளனர். அவர்கள் பார்வையிட்ட பிறகு அதற்கு ஏற்றவாறு மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் கடந்த மாதத்தில் ராஜகோபுரத்தில் ஆய்வு செய்த தொழில்நுட்ப வடிவமைப்பு குழுவினர் விரிசல் ஏற்பட்டதை கண்டறிந்து அதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பிரசித்தி பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News