செய்திகள்

என்ஜின் கோளாறு: பழனி-சென்னை ரெயில் 3 மணி நேரம் தாமதம்

Published On 2016-07-26 09:24 IST   |   Update On 2016-07-26 09:24:00 IST
என்ஜின் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து பழனி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 3 மணி நேரம் தாமதமாக வந்தது.
திண்டுக்கல்:

சென்னை சென்ட்ரலில் இருந்து பொள்ளாச்சி வரை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், பழனி வழியாக இந்த ரெயில் செல்கிறது. சென்னையில் இருந்து சேலம் வரை மின் வழிப்பாதையிலும் சேலத்தில் இருந்து பொள்ளாச்சி வரை டீசல் என்ஜின் மூலமும் இயக்கப்படுகிறது.

நேற்று இரவு 9.40 மணிக்கு சென்னையில் புறப்பட்ட ரெயில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நாமக்கல்-ராசிபுரம் இடையே இலங்காங்குடி என்ற இடத்தில் வந்த போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து சேலம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது.

சேலத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட பிறகு மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இந்த ரெயிலில் அடிக்கடி இது போன்ற என்ஜின் பழுது ஏற்படுகிறது. காலை 5.30 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக வந்ததால் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உரிய நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Similar News