செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு எதிரொலி: தமிழக-கர்நாடக எல்லைகளில் இரு மாநில பஸ்கள் நிறுத்தம்

Published On 2016-09-06 07:41 IST   |   Update On 2016-09-06 07:41:00 IST
காவிரியில் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன் எதிரொலியாக தமிழக-கர்நாடக எல்லைகளில் இரு மாநில பஸ்களும் நிறுத்தப்பட்டன.
சேலம்:

தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை கண்டித்து கர்நாடக விவசாயிகள் சாலை மறியல் உள்பட பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக அரசு பஸ்கள் நேற்று கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியுடன் நிறுத்தப்பட்டன. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.

அவர்கள் பாலாறு சோதனைசாவடியில் இருந்து கர்நாடக மாநில அரசு பஸ்கள் மூலமாகவும், தற்காலிகமாக இயக்கப்பட்ட வேன்கள் மூலமாகவும் மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூருக்கு சென்றனர். இதுபோல கர்நாடக அரசு பஸ்களும் பாலாறு சோதனைச்சாவடியுடன் நிறுத்தப்பட்டன.

ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, பழனி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பெங்களூரு, மைசூரு, கொள்ளேகால், சாம்ராஜ் நகர், குண்டல்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் நேற்று காலை 6 மணி முதல் இயக்கப்படவில்லை.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு இயக்கப்படும் 40-க்கும் மேற்பட்ட கர்நாடக அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. வழக்கமாக தமிழக அரசு பஸ்கள், சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம், ஆசனூர் வழியாக கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் பகுதியில் 12 கிலோ மீட்டர் சென்று மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள தாளவாடியை சென்றடையும். ஆனால் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் சென்று அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தலமலை வழியாக தாளவாடியை சென்றடைந்தன.

கர்நாடக மாநிலத்தில் இருந்து நேற்று ஏராளமான பொதுமக்கள் ஈரோடு, கோவை, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்திருந்தனர். அரசு பஸ்கள் இயக்கப்படாததால் ஏராளமான பயணிகள் கர்நாடகம் செல்ல முடியாமல் தவித்தனர்.

கோவையில் இருந்து கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூரு, மைசூரு, மாண்டியா, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு 60 பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை முதல் அந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. கோவை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ள கர்நாடக போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம் வழியாக பெங்களூரு, மைசூருக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பஸ்கள் ஓசூர் வரை மட்டும் இயக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் தமிழக வாகனங்கள் எதையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அந்த வாகனங்கள் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டன. அதேபோல் கர்நாடகாவில் இருந்தும் தமிழகத்துக்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.

ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் தங்களது சொந்த பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அவதிக்குள்ளானவர்கள். பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ரெயில்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

Similar News