செய்திகள்

குறுவை பயிர் சேதம்: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published On 2016-09-06 09:15 IST   |   Update On 2016-09-06 09:15:00 IST
குறுவைப்பயிர் மழையால் சேதமடைந்ததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாதே என்ற மன உளைச்சலில் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்:

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (70). விவசாயி. இவர் தனது உறவினருக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்தார். குறுவை நடவுசெய்து பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் கதிர்முற்றிய பயிர்கள் வயலில் சாய்ந்து மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நெல் முளைத்து சேதமடைந்தது.

இதன் காரணமாக சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த செல்வராஜ், கடந்த 3-ந்தேதி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராஜ் இறந்தார்.

குறுவை பயிர் சேதமடைந்ததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது என்ற மனஉளைச்சலில் செல்வராஜ் வி‌ஷம் குடித்து இறந்ததாக அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News