செய்திகள்

வேலூரில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை: வட மாநில கும்பல் சுற்றிவளைப்பு

Published On 2016-09-06 14:14 IST   |   Update On 2016-09-06 14:14:00 IST
வேலூரில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளை கும்பல் விரைவில் கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர்:

வேலூர் மேல்மொணவூர் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவன ஏ.டி.எம். மற்றும் காட்பாடி திருநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்த கொள்ளையர்கள், ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்து தப்பினர்.

இந்த 2 சம்பவங்களிலும் வடமாநில கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது. கொள்ளை நடந்தபோது, காட்பாடி திருநகர் ஏ.டி.எம். மையம் அருகே நின்றிருந்த கார், அடுத்த அரைமணி நேரத்தில் மேல்மொணவூர் ஏ.டி.எம். அருகே நின்றிருந்தது உறுதியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து, கொள்ளை கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சந்தேகத்துக்குரிய காரின் பதிவெண் குறித்து விசாரித்த போது, அது ராஜஸ்தான் மாநிலத்துக்கு உரியது என்று தகவல் கிடைத்தது.

மேல்மொணவூர் பகுதியில் உபயோகித்த செல்போன் எண் டவர்களை ஆய்வு செய்ததிலும், ராஜஸ்தானில் இப்போது உபயோகிப்பது தெரியவந்தது. இதற்கிடையே, கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவன் பெங்களூரில் பிடிபட்டான்.

அவனிடம் நடத்திய விசாரணையில், கொள்ளை கும்பலை சேர்ந்த மற்றவர்கள் அரியானா, ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. பிடிபட்ட கொள்ளையனுடன், தனிப்படை போலீசார் வட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகித்திற்கிடமான காரின் பதிவெண் முகவரியை கொண்டு அதன் உரிமையாளரை போலீசார் நெருங்கினர். காரை பறிமுதல் செய்து, உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட மாநிலங்களில் மூளை முடுக்கெல்லாம் தேடி ஒருவழியாக கொள்ளை கும்பலை போலீசார் நெருங்கி உள்ளனர். உதவிக்கு வட மாநில போலீசாரின் உதவியையும் வேலூர் தனிப்படை போலீசார் அணுகினர்.

வடமாநில போலீசாரும் கொள்ளை கும்பலை பிடிக்க ஒத்துழைப்பு தந்துள்ளனர். கொள்ளை கும்பலை எந்த காரணத்தை கொண்டும் தப்பிக்க விடாமல் இருக்க போலீசார் அரண் ஏற்படுத்தி உள்ளனர்.

அதன்படி, கொள்ளை கும்பல் அசரும் நேரத்தில் சுற்றிவளைத்து கூண்டோடு பிடிக்க திட்டம் வகுத்துள்ளனர். எனவே, கொள்ளை கும்பல் விரைவில் கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News