செய்திகள்

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் சு.திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2016-10-03 02:12 IST   |   Update On 2016-10-03 02:12:00 IST
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என சு.திருநாவுக்கரசர் பேட்டியளித்தார்.
சென்னை:

மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருடைய பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளையொட்டி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று அவர்களுடைய உருவப்படங்கள் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி., ராணி, மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஹசீனா சையத், மாவட்ட தலைவர் என்.ரங்கபாஷியம், கவுன்சிலர் பி.வி.தமிழ்செல்வன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் காந்தி, காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருடைய உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியின்போது, சு.திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காந்தியடிகள் கொள்கையான பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற ஊரக வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் அடைந்து மீண்டும் பணியை தொடர வேண்டும் என்பதே அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News