செய்திகள்

ராம்குமார் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது

Published On 2016-10-03 07:15 IST   |   Update On 2016-10-03 07:15:00 IST
புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமார் உடல் அவரது சொந்த ஊரான செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தென்காசி :

சென்னை கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 18-ந் தேதி ராம்குமார் சிறையில் உள்ள மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் ராம்குமார் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ராம்குமாரின் உடல் அங்கிருந்து அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துவரப்பட்டது. நேற்று காலை 10.50 மணி அளவில் மீனாட்சிபுரத்துக்கு ராம்குமார் உடல் வந்து சேர்ந்தது.

ராம்குமார் உடல் ஆம்புலன்சில் இருந்து இறக்கப்பட்டு வீட்டின் முன்பு வைக்கப்பட்டது. ராம்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதவாறு அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்பட பலர் ராம்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ராம்குமார் உடல் வேறொரு வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக பண்பொழி அருகே உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாலை 4.45 மணி அளவில் ராம்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News