செய்திகள்

மத்திய அரசை கண்டித்து அக்.7-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: திமுக அறிவிப்பு

Published On 2016-10-03 23:09 IST   |   Update On 2016-10-03 23:09:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை கண்டித்து, வருகின்ற அக்டோபர் 7-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் போராட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியத்தை 4-ந் தேதிக்குள்(நாளை) அமைக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 30-ந் தேதி உத்தரவிட்டது. அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த மத்திய அரசின் வக்கீல், அந்த வாரியத்தை அமைக்க தயாராக இருப்பதாக கூறினார்.

இதற்கு கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு  தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது என்று கூறியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடியின் உருவபொம்மை எரித்து போராட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை கண்டித்து திமுக போராட்டம் அறிவித்துள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 7-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது.

முன்னதாக மத்திய அரசின் திடீ முடிவிற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து இருந்தார்.  

இதனிடையே, இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் நலக் கூட்டணியும் அக்டோபர் 7-ம் தேதியே போராட்டம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News