செய்திகள்

சென்ட்ரல், எழும்பூரில் இருந்து நெல்லை, கோவை, திருவாரூர் மார்க்கத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2017-05-15 10:04 IST   |   Update On 2017-05-15 10:06:00 IST
தமிழகம் முழுவதும் பஸ் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளதால் சென்ட்ரல், எழும்பூரில் இருந்து நெல்லை, கோவை, திருவாரூர் மார்க்கத்தில் சிறப்பு ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
சென்னை:

தமிழகம் முழுவதும் பஸ் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளதால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் வெளியூர் பயணங்களை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய சூழலில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சீர்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டன. அதனை ஏற்று சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 40 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளது.



சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோவை, திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளன. சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு 2 ரெயில்களும், நெல்லையில் இருந்து சென்ட்ரலுக்கு ஒரு ரெயிலும் புறப்பட்டு செல்கின்றன.

சிறப்பு ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி, சேலம், கரூர், திருச்சி, மதுரை வழியாக செல்கின்றன. இதேபோல சென்ட்ரலில் இருந்து கோவைக்கு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் போல பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்ட்ரலில் புறப்பட்டு கோவை செல்லும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்து சேரும்.

எழும்பூரில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருவாரூருக்கு செல்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில் மற்றும் மாநகர பஸ் சேவை இருந்து வருகிறது. பஸ் சேவை முடங்கியதால் புறநகர் பகுதி களுக்கு கூடுதலாக மின்சார ரெயில்கள் இன்று முதல் இயக்குகிறது.
வழக்கமாக செல்லும் சேவைகளில் எவ்வித மாற்றமும் செய்யாமல் கூடுதலாக 40 சேவைகளை அதிகரித்துள்ளது. கடற்கரை- வேளச்சேரி, கடற்கரை- தாம்பரம், மூர்மார்க்கெட்- திருவள்ளூர் மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நெரிசலின்றி பயணம் செய்ய ஏதுவாக ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு சென்று திரும்ப வசதியாக சிறப்பு ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்துள்ளது.


Similar News