செய்திகள்

திண்டுக்கல்-தேனி மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை

Published On 2017-05-15 12:05 IST   |   Update On 2017-05-15 12:05:00 IST
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அரசு பஸ்கள் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் 80 சதவீதம் இயக்கப்படவில்லை.
திண்டுக்கல்:

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் 16 பணிமனைகள் உள்ளன. குமுளி, தேவாரம், போடி, கம்பம், தேனி, வத்தலக்குண்டு, பெரியகுளம், நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய பணிமனைகளில் இருந்து 923 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நேற்று மாலையே பெரும்பாலான பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் முழுமையாக வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டன. இதனால் திண்டுக்கல் - தேனி மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை.



இதனால் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் அரசு பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. தனியார் பஸ்கள், டூரிஸ்ட் பஸ்கள், மினி பஸ்களே அதிக அளவு இயங்கின. வெளியூர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து திண்டுக்கல் வந்த பயணிகள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை, திருப்பூர் போன்ற வெளியூர்களுக்கு செல்ல நேற்று இரவு அதிகளவு பயணிகள் வந்திருந்தனர். அந்த ஊர்களுக்கு அரசு பஸ்கள் இல்லாததால் தனியார் பஸ்களிலேயே பயணம் செய்ய நேரிட்டது. தனியார் பஸ்களுக்கு பெங்களூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பெர்மிட் இல்லை என்பதாணல் அந்த பயணிகள் ஓசூர் எல்லையிலேயே இறக்கி விடப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதே போல அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தனியார் பஸ்களை நம்பியே பொதுமக்கள் காத்திருந்தனர். மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல மினி வேன்களும் இயக்கப்பட்டன. இவற்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் வேறு வழியின்றி அதில் பொதுமக்கள் செல்லும் நிலை ஏற்பட்டது.

Similar News